Tuesday, October 9, 2012

கணினித்தமிழ் வளர்ச்சி மாநாடு


கணினித்தமிழ் வளர்ச்சி மாநாடு

( 2012 டிசம்பர் 15 )

 

அன்புடையீர்,

வணக்கம். இன்றைய உலகமயமாக்கச் சூழலில் நமது பல்வேறு பணிகளில் கணினியின் பங்களிப்பு அளப்பரியது என்பதில் ஐயமில்லை. நமது அன்றாடப் பணிமுதல் ஆய்வுத்திட்டப் பணிவரை அனைத்துமே கணினிவழியே மேற்கொள்ளப்படுகின்றன. இப்பணிகளையெல்லாம் மேற்கொள்வதற்கு ஒரு மொழி தன்னைத் தகுதிப்படுத்திக் கொள்வதும் வளர்த்துக்கொள்வதும் மிகவும் இன்றியமையாததாகும். அவ்வாறு தன்னை வளர்த்துக்கொள்ளாத மொழிகள், ஆதிக்கமொழிகளால் அழிவுக்குத் தள்ளப்படும். அம் மொழிகளைப் பேசும் இனங்களும் அவ்வினங்களின் பண்பாடுகளும் சீரழிவுக்கு உட்படும்.

 
மூண்டெழும் மொழிப்போர்
 

இந்தியாவில் இந்திமொழிமட்டுமே நடுவண் அரசின் ஆட்சிமொழி. தமிழ் உட்பட பிறமொழிகளுக்கு அத்தகுதி அளிக்கப்படவில்லை. தமிழ்மொழி தமிழ்நாட்டரசின் மாநில ஆட்சிமொழியாக மட்டுமே நீடிக்கிறது. இந்நிலையில் அனைத்து மொழிகளும் நடுவண் அரசின் ஆட்சிமொழிகளாக ஆக்கப்படவேண்டும் என்ற குரல் பல மாநிலங்களிலும் ஒலித்துவருகிறது. தமிழகத்தில் தொடர்ந்து இதற்கான பல போராட்டங்கள் நிகழ்ந்துள்ளன என்பது வரலாறு.


இந்தி மட்டும்தான் இந்தியாவின் மொழியா?
 

ஆட்சிமொழித் தகுதி பெற்றுள்ள இந்திமொழியை அனைத்துவகைகளிலும் வளர்த்தெடுக்கப் பல கோடி நிதி செலவழிக்கப்படுகிறது. குறிப்பாகக் கணினிவழி இந்திப் பயன்பாட்டைப் பெருக்குவதற்காக அனைத்துப் பணிகளும் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இந்திமொழியை மட்டுமே ஆட்சிமொழியாக அனைத்து மொழியினரும் ஏற்றுக்கொள்வதற்காகவும், இந்திமொழி வாயிலாக மட்டுமே அனைத்து மொழிகளும் கணினிவழிப் பயன்பாட்டுத் தொடர்புகொள்வதற்காகவும், பலவகைப் பணிகள் ஓசையின்றி மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.


அனைத்து மொழிகளும்  ஆட்சிமொழி!
 

இந்நிலையில் தமிழ்மொழியின் வளர்ச்சிக்கான பணிகள் குறித்து நாம் எண்ண வேண்டியுள்ளது. தமிழ் உள்ளிட்ட அனைத்துமொழிகளும் இந்திய அரசின் ஆட்சிமொழிகளாக ஆக்கப்படவேண்டும் என்பதும் எந்த மொழியும் பிறமொழிகளின்மீது ஆதிக்கம் செலுத்தக்கூடாது என்பதுமே நமது அடிப்படைக் கோரிக்கை. எனவே இந்திய அரசு, இந்தியை மட்டுமே ஆட்சிமொழியாக அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற நோக்கத்தில் செயற்படாமல், அனைத்து இந்தியமொழிகளின் வளர்ச்சிகளுக்காகவும் சமஅளவில் பணிகளை மேற்கொள்ளவேண்டும் என்ற முழக்கத்தை நாம் முன்வைக்கவேண்டும். அனைத்துமொழிகளும் சமம் என்ற அடிப்படையில் கணினிவழி மொழிவளர்ச்சிக்கான பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தவேண்டும். இதற்கான முன்முயற்சியைத் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளவேண்டும்; மேற்கொள்ளுமென நம்புகிறோம்.


அனைத்துப் பயன்பாட்டிலும் தாய்மொழி!


அதேவேளையில், தமிழ்நாட்டரசின் ஆட்சிமொழியான தமிழ்மொழியானது மின்-ஆளுகை, மின்-வணிகம், மின்-கல்வி போன்ற பல முனைகளிலும் மின்னணுக் கருவிகளில் பயன்படக்கூடிய மொழியாக வளர்த்தெடுக்கப்படவேண்டும். செல்பேசியிலிருந்து உயர்நிலைக் கணினிவரை , அனைத்து மின்னணுக்கருவிகளிலும் பயன்படுத்தக்கூடிய மின்னணு மொழியாகத் தமிழ் மலரவேண்டும்.  சொல்லாளர் மென்பொருளிலிருந்து  கணினிவழி மொழிபெயர்ப்பு மென்பொருள்வரை அனைத்து மென்பொருள்களும் தமிழுக்கு உருவாக்கப்படவேண்டும். இதற்கான ஒரு தெளிவான திட்டத்தைத் -  தமிழ்மொழி மின்னணுமயமாக்கம் என்ற தமிழுக்கான தகவல் தொடர்புத் தொழில்நுட்பத் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு வகுத்து, அதனடிப்படையில் பணிகளை மேற்கொள்ளவேண்டும்.. தமிழ்நாட்டில் தமிழர்கள் அனைவரும் தங்களது அன்றாடப் பணிகள் அனைத்தையும் கணினிவழித் தமிழைப் பயன்படுத்தத் தேவையான எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளவேண்டும்.


கோரிக்கை  மாநாடு


மேற்கூறிய நோக்கங்களின் அடிப்படையில் தமிழ் ஆர்வலர்கள், ஆய்வாளர்கள், ஆசிரியர்கள், மாணாக்கர்கள் அனைவரும் ஒருங்கே கூடி, கணினித்தமிழ் வளர்ச்சிபற்றி விழிப்புணர்வைத் தமிழ்மக்களிடையே உருவாக்கவும், கணினித்தமிழ் வளர்ச்சிக்கான தெளிவான திட்டத்தை உருவாக்கவும், அதற்கான பணிகளை மேற்கொள்ளவும், தமிழ அரசின் பார்வைக்கு இவைபற்றியெல்லாம் முறையாகக் கொண்டுசெல்லவும்  கணினித்தமிழ் வளர்ச்சி மாநாட்டை 2012 திசம்பர் 15 சனிக்கிழமையன்று சென்னையில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.   


இம்மாநாடு வெற்றிபெற முழுமையான ஒத்துழைப்பு நல்குமாறு அனைவரையும் அன்புடன் வேண்டிக் கொள்கிறோம்.

 
அன்புடன்

மாநாட்டுக் குழுவினர்

கணினித்தமிழ் வளர்ச்சி மாநாடு

 

 

    

 

 

                    

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India