Wednesday, December 19, 2012

முனைவர் இராம.கி அவர்களின் உரை


கணித்தமிழ் வளர்ச்சி மாநாட்டுத் தீர்மானங்கள்

முனைவர் இராம.கி.

சென்னை 600101
 

மொழி என்பது அடிப்படையிற் பேச்சையே குறிக்கும். எல்லா மாந்த மொழிகளும் பேசும் வலுவை (speaking ability) இயல்பாகப் பெற்றிருக்கின்றன. அவ்வலு இல்லாது போயின், மொழிகள் வெறும் ஓசைக் கூட்டங்களாய், பிதற்றல்களாய், விலங்கொலிப் பரட்டல்களாய் நின்று போயிருக்கும்.

மொல்>(மொள்)>மொழி.

மொல்மொல்லெனல் = பேசற் குறிப்பு;

மொலுமொலுத்தல் = விடாது பேசல், இரைதல், முணுமுணுத்தல்.

மொல்லுதல் = தாடையசைத்தல்; ஒலி எழுப்பல்.

 

சாப்பிடுகையில் ஓசையெழுவதையும் மொல்லுதலென்றே சொல்கிறோம். ”அவன் என்ன வாய்க்குள் மொல்லுகிறான்? வாயைத்திறந்து சொல்லவேண்டியதுதானே? இந்த மொல்லல்தானே வேண்டாங்கிறது?.” மொல்லுவது மொழி. இதன் இன்னொரு வளர்ச்சி

 

மொல்லல்>(மொள்ளல்)>மொணுங்கல்>முணுங்கல்.  மொணுமொணுத்தல்>மொனுமொனுத்தல்>மோனம்>மௌனம்.

இனிச் சொற்பிறப்பிற்குள் போகாது, கருத்து வளர்ச்சிக்கு வருவோம்.

பேசும் வலுப்பெற்ற மொழிகளிற் சில, ஒரு காலகட்டத்தில் எழுத்து வலுப் (writing enabled) பெற்றன. இன்னும் நாட்செல, அவற்றிற் சில, அச்சு வலு (printing enabled) உற்றன. அவற்றிலுஞ் சில, வளர்ந்த மொழிகளாகி, மின்னி வலுப் (electronically enabled) பெறுகின்றன.

மின்னி என்பது electron-யைக் குறிக்கும்; மின்னணு என்று நீட்டி முழக்கவேண்டாம். மின்னியெனச் சுருக்கிச் சொல்லலாம். மின்னி என்பது கணிக் (=computer) கருத்தீட்டிற்கும் மேலானது; அகண்டது. கணிகளுக்கும் (computers) மீறி பல மின்னிப் பொறிகளில் (electronic equipments) இன்று மொழிப் பயன்பாடு இருக்கிறது. காட்டு: நகரும் போதே, ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளப் பயன்படும் நகர்பேசி அல்லது செல்பேசி (= cell phone) இன்னும் தொலைக்காட்சி (television), இசையியக்கி (music player). உறையூட்டி (refrigerator) போன்ற கணக்கற்ற கருவிகளுக்குள் மொழிப் பயன்பாடு வந்துவிட்டது.

கணி வலுவைக் காட்டிலும், மின்னி வலு விரிந்தது. அதே பொழுது, கணி வலுவிற்கான செயற்பாடுகள் மின்னி வலுவிற்கும் உதவுகின்றன. இற்றை நுட்பியல் வளர்ச்சியில் மின்னிக் கருவிகளிற் பயன்படும் வகையில் இயல்மொழிகளை ஏற்றதாக்கும் கட்டாயமிருக்கிறது. எழுத்து வலு, அச்சு வலு, மின்னி வலு என ஒவ்வொன்றும் மொழிவளர்ச்சியில் ஒரு நுட்பியல் எழுச்சியாகும். இவ்வெழுச்சிகளைத் தாண்டி வளர்ந்த மொழிகளே முகல்ந்து (modernized) வருகின்றன; நிலைத்து நிற்கின்றன. உலகத்திற் பலமொழிகள் (காட்டாக ஆங்கிலம், சீனம், இசுப்பானியம், பிரஞ்சு, செருமானியம், உருசியம், சப்பானியம், அரபி, துருக்கி போன்று பல்வேறு மொழிகள்) இத்தகுதி பெற்றிருக்கின்றன.

அதே பொழுது, உலகத்தில் ஏறத்தாழ 10 கோடிப்பேர் பேசும் தமிழ்மொழி (தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 7.5 கோடிப்பேர் தமிழ் பேசுவதாகச் சொல்கிறார்கள்.) இவ்வலுக்களில் எப்படி எழுந்துவந்திருக்கிறது - என்பது கேள்விக்குறியே ஆகும். எழுத்து வலுவைத் தமிழ் மொழி, 2500 ஆண்டுகளுக்கு முன் பெற்றதாக ஆய்வாளர் கூறுகின்றனர். குடியேற்ற (colonialism) ஆதிக்கத்தால், கிறித்துவ விடையூழியர் மூலம் தூண்டப்பெற்று இம்மொழி, அச்சு வலுவை 400, 450 ஆண்டுகளாகப் பெற்றிருக்கிறது. இந்தியத் துணைக்கண்டத்திலேயே அச்சுக்குள் முதலில் நுழைந்தமொழி தமிழ் தான்.

இன்று குடியேற்றத் தாக்கம் போய், இந்தியா விடுதலை பெற்றுவிட்டது. “நாமே இந்நாட்டு மன்னராகிவிட்டோம்ஆனால் பல்வேறு வரலாற்றுப் பிழைகளுக்கு அப்புறம்,இன்று தமிழ்மொழி மின்னி வலுவைப் பெற்றதா?” எனில் இல்லெனச் சொல்லவேண்டும். தமிழினும் இளமையான இந்தி மொழி, நடுவணரசின் முயற்சிகளால், தகுதியான மின்னி வலுவை நம் கண்ணெதிரே பெற்றுக் கொண்டிருக்கிறது. அதே பொழுது, தமிழையும் சேர்த்த மாநில மொழிகளோ ஆட்சி வலுப் பெறாது, மின்னி வலுவுறாது, தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கின்றன.

கூடவே, நம் விளங்காமையால்,, தமிழ்ப் பேச்சுவலு, எழுத்துவலு, அச்சுவலு என எல்லாவற்றையுங் குறைத்துக் கொண்டிருக்கிறோம். ”தமிழாற் தனித்தேதுஞ் செய்ய முடியாதோ?” எனும் நிலைக்கு வந்து, தமிங்கிலக் கலப்பு அவ்விடத்திற் புற்றீசலாய்ப் பரவிக் கொண்டிருக்கிறது. கட்டுமுகமாய் ஏதுஞ் செய்யாதிருந்தால், நம்மூரிலேயே தமிழைச் சில பதின்மங்களிற் தேட வேண்டியிருக்கும். நான் சொல்லுவது வெறும் எச்சரிக்கையல்ல. உள்ளமை நிலையாகும்.

உலகம் கணிமயமாக மாறிக் கொண்டிருக்கிறது. நம்முடைய குமுக, அரசு நடவடிக்கைகளும், அரசு-பொதுமக்களிடையுள்ள இடையாட்டங்களும் (interactions) இனிமேலும் வெறுமே எழுத்துமயம், அச்சு மயம் என்று மட்டுமே ஆகிக் கொண்டிருப்பதிற் பொருளில்லை. பல்வேறு தரவுத் தளங்கள் வெறுமே எழுத்துக் கோப்புகளில், அச்சுக் கோப்புக்களில் சேகரித்து வைக்கப்படவில்லை. அவை மின்னி மயமாக்கிக் காப்பாற்றப்படுகின்றன.

எல்லா இடையாட்டங்களும் நேரே ஓர் அலுவலகத்தில், அலுவர் முகம் பார்த்து விண்ணப்பிக்கப் படுவதில்லை. பிறப்புச் சான்றிதழ் பெறுவது, திருமணத்தைப் பதிவது, மனை விற்பனையைப் பதிவது, சுற்றுச் சூழல் வெம்மைகள் (temperatures), மழைப் பொழிவு அறிவிப்புக்கள் (rainfall announcements) வெதணங்கள் (climates), வேளாண்மை அறிவுரைகள், அரசிற்குப் பொதுமக்கள் விடுக்கும் வெவ்வேறு வேண்டுகோள்கள், பொதுமக்களுக்கான அரசுச் சேவைகள், வணிகங்களுக்கு இடையே, பொதினங்களுக்கு (businesses) இடையே நடைபெறும் பரிமாற்றங்கள், பொதினங்கள்-அரசுகள் இடையே பரிமாற்றங்கள், பொதினங்களுக்கும் நுகர்வோருக்கும் இடையே பரிமாற்றங்கள் என எல்லாமே அந்தந்தவூர் மொழியில் மின்னிக் கருவிகள் வழியே, நடைபெறுகின்றன. தமிழில் மட்டும் தான் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இது அரிதாய் நடக்கிறது. கணிமயப்படுத்தல் என்பது வளர்ந்த நாடுகளில் 99% என்றால், இந்தியில் 10% என்றால் தமிழில் 1% கூட நடைபெறுவதில்லை.

மின்னிமயமாக்கும் போது நமக்கு ஆழ்ந்த கவனம் தேவை. தமிழில்செருப்பிற்கேற்ற காலா? காலிற்கேற்ற செருப்பா?” என்ற சொலவடையுண்டு. மின்னிமயப் படுத்தலுக்கு ஏற்ற மொழியா, மொழிக்கேற்ற மின்னிமயப் படுத்தலா? இந்தக் காலத்திற் செருப்பிற்கேற்ற காலாக நாம் வெட்டிக் கொண்டிருப்பது போற் தெரிகிறது. தமிழ்மொழிக்குப் பயன்படும்படி கணிமயப் படுத்தாமல், கணிமயப் படுத்தலுக்குத் தக்க நம் மொழியையே மாற்றிக் கொண்டிருக்கிறோம். இது தவறான அணுகுமுறையாகும். தமிழைச் சவலைப் பிள்ளையாக வைத்து, கணிமயப் படுத்தலைச் செயற்படுத்தும் தேவையில் ஆங்கிலக் குண்டுப் பிள்ளையை வளர்த்துக் கொண்டிருக்கிறோம். நடுவண் அரசு அந்த இடங்களில் இந்தி மொழியை வளர்த்துக் கொண்டிருக்கிறது.

புத்தம் புதிய கலைகள் - பஞ்ச

   பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்

 மெத்த வளருது மேற்கே - அந்த

   மேன்மைக் கலைகள் தமிழினிலில்லை

 சொல்லவுங் கூடுவதில்லை - அவை

   சொல்லுந் திறமை தமிழ்மொழிக்கில்லை

 மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த

   மேற்கு மொழிகள் புவிமிசையோங்கும்

 

என்று ஒரு பேதை சொன்னது உண்மையாகிக் கொண்டிருக்கிறது. நாம் விழித்துக் கொள்ளாதிருப்பின், இதைத் தவிர்க்க முடியாது. விழித்துக் கொள்ளவேண்டியதின் பொருள், தமிழுக்கு மின்னி வலு கொடுப்பது தான்.

மின்னி வலுவென்பதற்கு முதலடிப்படைகணிக்குள் எப்படிக் குறியேற்றம் பெறுவது?” என்ற கேள்விக்கான விடையாகும். இதற்கான முயற்சிகள் வெவ்வேறு மொழிகளுக்கு நடந்தாலும், இந்திய மொழிகளுக்கான முயற்சிகள் 1970, 80 களில் நடந்தன. இவையெல்லாம் தனியார், தனி நிறுவனங்கள், தனியரசுகளின் முயற்சிகளாகும். இவற்றை வரலாறு பூருவமாக நான் இங்கு விவரிக்க முற்படவில்லை. இவற்றின் முடிவில் 1990 களில் உலகின் பல்வேறு நிறுவனங்களும், அரசுகளும் ஏற்கும் வகையில் ஒருங்குறிக் குறியேற்றம் ஏற்பட்டது.

அந்த ஒருங்குறிக் குறியேற்றத்தில் உலகின் பல மொழிகளுக்கு இடங் கொடுத்தார்கள். தமிழுக்கும் கொடுத்தார்கள். உரிய நேரத்தில் தமிழுக்கு வேண்டிய இடங்களைக் கேட்டிருந்தால் தமிழின் உயிர், மெய், உயிர்மெய் என அனைத்து எழுத்துக்களுக்கும் இடம் கிடைத்திருக்கும். அந்த நேரத்தில் நாம் சரியாகச் செயற்படாது தூங்கிப் போன காரணத்தால், நடுவண் அரசுப் பரிந்துரையில் உயிர், அகர உயிர்மெய், சில உயிர்மெய் ஒட்டுக்குறிகள் என மொத்தம் 128 இடங்களே கிடைத்தன. இவற்றை வைத்து கணிநுட்பம் மூலம் சில சித்து வேலைகள் செய்து உயிர்மெய் எழுத்துக்களைக் கணித்திரையிற் கொண்டு வருகிறோம். இதுதான் இன்றைய நிலை.

இந்தச் சித்துவேலைகள் தமிழை இணையத்திற் பயன்படுத்துவதற்கும் கணிக்கோப்புக்களைச் சேமித்து வைப்பதற்கும், ஒரு கணியில் இருந்து இன்னொரு கணிக்கு பரிமாறுவதற்கும் பயன்பட்டன. சொற்செயலிகளிலும், பல்வேறு அச்சிகளிலும் (printers) இது ஒழுங்காகவே செயற்பட்டது. ஆனால் பெரும் பொத்தகங்கள், ஆவணங்கள் போன்றவற்றை PDF கோப்புகளில் கொண்டுவந்து அச்சு நுட்பத்திற்கு மாற்றுவதில் ஒரு சில உயிர்மெய்கள், ஒகர, ஓகாரம் போன்றவை, முரண்டு பிடித்தன. எளிதில் ஒன்றிற்கொன்று கணுக்கம் (connection) ஏற்படுத்தி உயிர்மெய்களைப் பெறாததால், கணியில் இருந்து அச்சு நுட்பத்திற்கு மாறும் பொழுது ஒருசில குறைகள் ஏற்பட்டன.

இதன் விளைவாகத் தமிழ் நுட்பியலாளர்கள் அனைத்தெழுத்துக் குறியேற்றம் (all character encoding) என்ற ஒன்றைப் பரிந்துரைத்தனர். இதை ஒருங்குறிச் சேர்த்தியத்திடம் (unicode consortium) தமிழக அரசு வழித் தெரிவித்தோம். இதுகாறும் ஒருங்குறிச் சேர்த்தியம் தன் ஒப்புதலை இதற்கு வழங்கவில்லை. இதற்கிடையில் தமிழக அரசு தமிழில் உள்ள இணையப் பரிமாற்றங்களுக்கும் ஏதுவாக ஒருங்குறியையும். அச்சு நுட்பத்திற்குத் தேவையான வகையில் அனைத்தெழுத்துக் குறியேற்றத்தையும் ஏற்று 2009 இல் அரசாணை பிறப்பித்தது

மாநாட்டுத் தீர்மானங்கள்:

1.    தமிழக அரசு தானே 2009 இல் அறிவித்த அரசாணையை நடைமுறையில் முழுதும் செயற்படுத்தாது இருக்கிறது. இந்த அரசாணை வரும் பொழுது, தமிழகத்தின் அனைத்து அரசியற் கட்சிகளும், இயக்கங்களும், கணியரும், தமிழறிஞரும், ஆர்வலரும் வரவேற்றனர். அதுநாள் வரை அரசுக்குள்ளும், அரசு-பொதுமக்களிடையேயும் இருந்த பரிமாற்றங்கள் தனியார் குறியேற்றத்திலேயே நடந்து வந்தன, இவ்வாணை மூலம் ஒருங்குறி, அனைத்தெழுத்துக் குறியேற்றங்களுக்கு அரசுப்பணிகளும் குமுகச் சேவைகளும் மாறவேண்டும் என்று தமிழக அரசு உறுதியாக நெறிப் படுத்தியது. ஆனால் மூன்றாண்டாக இவ்வாணை செயற்படாதிருக்கிறது. அரசுப் பணிகள் தமிழின் மூலம் கணி மயமாக வேண்டுமென்றால், மின்னி மயமாக வேண்டுமென்றால், இவ்வரசாணை உடனடியாகச் செயற்படுத்தப் படவேண்டும். இன்றும் கூடத் தமிழக அரசுச் செயலகத்துட் செயற்பட்டுக்கொண்டிருக்கும் வெவ்வேறு தனியார் கணிக் குறியேற்றங்கள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும். (ஒருங்குறியிற் தமிழை உள்ளிட இலவயமாகவே இணையத்தில் -கலப்பை, NHM writer போன்ற மென்பொருள்கள் கிடைக்கின்றன. தமிழக அரசு தமிழ் உள்ளீட்டுக்காக எந்தக் காசும் செலவழிக்க வேண்டியதில்லை.)

2.    தமிழக அரசு பல்வேறு இணையத்தளங்களை தன் சேவையையொட்டி ஏற்படுத்தியிருக்கிறது. (இவையெல்லாம் இற்றைப்படுத்தப்படாமலே இருக்கின்றன. உடனடியாக இவற்றை இற்றைப்படுத்த வேண்டும்.) தமிழக அரசின் பல துறைகளும் பல்வேறு விண்ணப்பங்களை/படிவங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. அவையெல்லாம் ஒருங்குறி வடிவில் இணையத்தில் பொதுமக்கள் அணுகும் வகையில் அமையவேண்டும். தமிழில் எல்லத் துறைகளிலும் மின்னாளுமை என்பது இன்னும் 6 மாதங்களிற் கட்டாயமாகச் செயற்படவேண்டும்.

3.    நேரடியாக அரசு அலுவலகத்திற்கு வந்து அலுவலரைத் தொடர்புகொள்ளும் தேவை படிப்படியாகக் குறைக்கப்பட வேண்டும். வெறுமே கணிமயப்படுத்தலில் மட்டுங் கவனஞ் செலுத்தாது, எல்லாவற்றையும் ஆங்கிலத்திற் செயற்படுத்திக் கொண்டிராது, தமிழ்வழி கணிமயப்படுத்தவேண்டும். தமிழக் அரசிற்கென தகவல் நுட்பியற் கோட்பாடு (IT policy) அறிவிக்கப்படவேண்டும்.

4.    தமிழக வருவாய்த்துறையின் அடியில் வரும் பத்திரப் பதிவுத் துறை கணிமயமாக்கப் பட்டுவருகிறது. அதில் எல்லாப் படிவங்களும் தமிழில் ஏற்படுத்தப்பட்டு, பெறுதிச் சீட்டுக்கள் தமிழிலேயே கொடுக்கப்படவேண்டும்.

5.    தமிழக அரசு நடத்தும் பல்வேறு கல்வி வாரியங்கள், பல்கலைக்கழகங்களின் அலுவல்கள் தமிழிலேயே நடந்து தமிழ்வழி மின்கல்வி பெருகவேண்டும்.

6.    முதுகலை, முது அறிவியல், இளம் பொறியியல், மருத்துவம், இளமுனைவர், முனைவர் பட்ட நேர்முகத் தேர்வுகளுக்கான புறத்திட்ட அறிக்கைகள் (project reports), ஆய்வேடுகள் (theses) 5 பக்கங்களுக்காவது தமிழ்ச்சுருக்கம் கொண்டிருக்கவேண்டும். நேர்முகத் தேர்வில் 15 நுணுத்தங்களாவது (minutes) தமிழில் கேள்விகள் கேட்டு, விடைவாங்கி, அதற்கப்புறமே பட்டமளிப்புத் தேர்ச்சி கொடுக்கவேண்டும். தமிழே தெரியாது தமிழ்நாட்டிற் பட்டம் பெறுவது சரியல்ல.

7.    இப்பொழுது தமிழ்நாட்டில் வணிகப் பெயர்ப் பலகைகள் தமிழ்ப் படுத்தப்பட்டு வருகின்றன. இது ஒரு தொடக்கப்பணியே. தமிழ்நாட்டு வணிகம் தமிழிலேயே நடைபெறவேண்டும். எந்தக் கடையில், நிறுவனத்தில் பெறுதிச் சீட்டு வாங்கினாலும் அது ஆங்கிலத்திலேயே இருக்கிறது. தனியார் பேடுந்துகளில் பயணச்சீட்டு கூட ஆங்கிலத்தில் இருக்கிறது. தமிழ் மட்டும் தெரிந்த 85% மக்கள் வெறுமே அதிகாரிகள் முகம் பார்த்து, “என்ன சொல்வாரோ?” என்று ஏமாந்து நிற்பதாய் நிலைமையிருக்கிறது  அவரவர் சிக்கலில் அவர்களே முரையிடும் வகையில் குமுக நடைமுறைகள் இருக்கவேண்டும். தமிழில் பெறுதிச் சீட்டு அளிப்பதை ஊக்குவிக்கும் வகையில், மாநில அரசு விற்பனைவரியில் மாற்றமிருக்க வேண்டும். ஒரு நுகர்வோர் தமிழில் விற்பனைப் பெறுதிச் சீட்டு கேட்டால், குறிப்பிட்ட விழுக்காடும், ஆங்கிலத்திற் கேட்டால் அதற்கு மேல் 1% அதிக விற்பனை வரியும் அரசு விதிக்கவேண்டும். இதன் மூலம் எல்லா வணிக நிறுவனங்களிலும் தமிழ் மெய்யாகப் புழங்கும் மொழியாக மாறும். தமிழ் மென்பொருள்களுக்கு ஒரு தேவையெழும். இப்பொழுது தமிழ் மென்பொருள்களுக்குச் சந்தையேயில்லை. மென்பொருளுக்குச் சந்தையில்லாது தமிழ் கணி மயமாகாது. Office softwares தமிழில் வரவேண்டுமானால் இந்தத் தூண்டுதல் மிகவும் தேவையான ஒன்றாகும்.

8.    தமிழகத்தில் விற்கும் எந்த மின்னிக் கருவிகள், மற்ற இயந்திரங்கள் என எல்லாவற்றிற்கும் உடன் அளிக்கப்படும் கையேடுகள் தமிழிலேயே இருக்க வேண்டும். அப்படி இருந்தால் 1% விற்பனைவரிச் சலுகை தரப்படும் என்று அறிவிக்கவேண்டும். தமிழில் இல்லாது ஆங்கிலம் போன்று வேறுமொழிகளில் மட்டுமேயிருந்தால் சலுகை கிடைக்காது என்று ஆகவேண்டும்.

9.    தமிழை ஆட்சிமொழியாக்கி, தமிங்கிலப் பயன்பாட்டைக் குறைக்கும் நாளிதழ்கள், தாளிகைகள், ஊடகங்களுக்கே தமிழக அரசு தன் அரசு விளம்பரங்களைக் கொடுக்கவேண்டும்.

10.  இன்னும் ஓராண்டில் பேச்சிலிருந்து எழுத்து (speech to text), எழுத்திலிருந்து பேச்சு (text to speech), இயந்திர மொழிபெயர்ப்பு (machine translation), தமிழ் அறிதியியல் (tamil informatics) போன்ற துறைகளிற் தமிழ் மென்பொருட்கள் வரும் படி திட்ட ஒதுக்கீடு செய்யவேண்டும். அந்த முயற்சிகளை ஊக்குவிக்க வேண்டும்.

11.  நாடாளுமன்றத்திற் கொண்டுவரும் சட்டத் திருத்தின் மூலம், தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகள் ஆட்சிமொழி அதிகாரத்தைப் பெறவேண்டும்.

12.  தமிழ் வழக்குமன்ற மொழியாக மாறவேண்டும்.

.

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India